ஆய்வு அறிக்கையின் செயல் திட்டங்கள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒரு "ஆய்வு இருக்கை சிங்கப்பூர் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி" என்ற பெயரில் கடந்த 05.09.2007ல் ஆரம்பிக்கப்பட்டது. (USD 50,000/= ஐம்பதாயிரம்) முதலீட்டில் துவக்கப்பட்டு, இம்முதலீடு (SHARES ) வங்கிப்பங்குகளாக வாங்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு USD 90,000/= ஆக உள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா தமிழ் இலக்கியம், வாழ்வு தொடர்பான ஆய்வில் ஈடுபடும் ஆய்வியல் நிறைஞர் ஒருவருக்கு P.hd, M Phil முனைவர் பட்ட ஆய்வாளர் இருவருக்கு உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வகை ஆய்வுகளை மேற் கொள்ள கல்வி நிலைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஆய்வு வழிகாட்டி ஒருவர் இரண்டாண்டுக்கு தொகுப்பூதிய பணியாளராக (தற்காலிக முறையில்) பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

தெற்காசிய,குறிப்பாக சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புக்கு ஆண்டு தோறும் இந்த அறக்கட்டளையின் நிதியின் மூலம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் "கரிகாற் சோழன் விருது" என்கின்ற விருது தங்கப்பதக்கமாக வழங்குகிறது.

சிங்கப்பூர்,மலேசியா தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்வதுடன், இக்கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளை நூலாக்கமும் செய்து, பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்,மலேசியா தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நூல்கள் ஒன்றை தொகுத்து வெளியிட்டது. இக்கருத்தரங்கம் கடந்த 01.08.2007ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கரிகாற் சோழன் விருது ஆண்டு தோறும் வழங்குவது சுழற்சி முறையில் தஞ்சாவூர் - சிங்கப்பூர் - மலேசியாவில் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சாவூரில் நடக்கும்போது மட்டும் ஆய்வரங்கு,கருத்தரங்கு, விருது வழங்குவது ஆகியவை, ஒன்றிணைந்த பெரு விழாவாக வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.

இதன் அடிப்படையில் சென்ற 05.06.2009 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும்,01.01.2011 ல் சிங்கப்பூரிலும், 10.03.2013 ல் மலேசியா -கோலாலம்பூரிலும் "கரிகாற் சோழன் விருது" விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது

தமிழ் இலக்கியம் தொடர்பான சிங்கப்பூர்,மலேசியா நூல்களுக்கு தனி நூலகமாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு அதற்கு மலேசிய அமரர் திரு.ஆதி குமணன் அவர்களின் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கும்,தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் எமது அறக்கட்டளை சார்பாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்,மலேசியாவில் வெளியான நூல்கள் கொண்டு சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தனி நூலகம் அமைத்தது.

அதன்படி சிறப்பம்சமாக மலேசியா,சிங்கப்பூரில் 1930 ம் வருடம் முதல் வெளியான சுமார் 3000 நூல்களை மிகவும் சிரமப்பட்டு திரட்டி இந்த பல்கலைக்கழக நூலகத்திற்கு அனுப்பித் தந்துள்ளது. இது போன்ற தொகுப்பு நூல்கள், மேற்கண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும், பிற்கால சந்ததிகளின் கவனத்திற்கும் மிகவும் பேருதவியாக இந்த தனி நூலகம் விளங்கி சிறப்பு செய்யும் என்ற செய்தியினை பதிவு செய்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகிறது சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. மேலும், இதன் மூலமாக நூல்களைத் திரட்டும் திட்டத்தினையும் கவனத்தில் கொண்டு தங்களிடம் இருக்கும் நூல்களை அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறது."

 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices