ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள் அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள்.

"ஐயோ... தாத்தா!"

"அம்மா தாத்தா குளிக்கிற அறை கதவருகை விழுந்துட்டாரு."

"என்னடி சொல்ற?"

"உண்மையா தாம்மா, வந்து பாரேன்..."

"ஐயோ ஆமா..., என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க."

"ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?"

"தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க.."

"குட்டி நீ போ.. போய் வெளியே சித்தப்பா பேசின்ருக்கான் அவனை கூட்டியா, ராஜா எங்கமா.."

"சித்தப்பா தெரிலையேப்பா" அந்த குழந்தை சொல்லிவிட்டு வெளியே ஓடிபோய் மூன்றாவது கடைசி தம்பியான சுகுமாரிடம் சொல்ல, அவன் அப்பா மயக்கம் என்றதும் வீட்டிற்குள் ஓடி வந்தான், வந்து அப்பாவை தூக்கி மடிமேல் கிடத்தி கன்னம் தட்டி -

"என்னண்ணே ஆச்சு, அப்பயே சொன்னேன் அப்பா சொல்றதை கேட்டா தானே..."

"ஏய் நீ சும்மா பதறாத, ராஜா எங்க, போய் கூட்டியா..."

"சின்னன்னே அப்பவே மேலே போய் படுத்துடுச்சிண்ணே."

"சரி நீ ஒன்னு செய், நீ போய் ஆனந்த் மருத்துவமனைல டாக்டர் போய்டப் போறாங்க, கொஞ்சம் சொல்லிவை, அப்பாவ நாங்க பின்னாலேயே கூட்டியாறோம்."

"போன் செய்து சொன்னா..."

"சொல்றதை செய்டா, அதலாம் மரியாதையா இருக்காது, நமக்கு மட்டுமா அவர் மருத்துவமனை நடத்துறாரு, நேரில் போய் சொன்னா கொஞ்சம் மதிப்பாங்கள்ல."

"சரிண்ணே."

"அதில்லாம அப்பா புது நோயாளி இல்லை சுகு, இப்போ இந்த நேரத்திற்கு ஆவடி போயி தாமதப்படுத்துவதும் அத்தனை சரியில்லை, இங்க கூட்டிப் போகணும்னா அவர் பெரிய டாக்டர் இருந்தா நல்லது, அதான் நீ கொஞ்சம் நேர்ல போய் பார்த்துச் சொல்."

அவன் அதற்கும் தலையாட்டிவிட்டு ஓடிப்போய் வெளியிலிருந்த பைக்கில் பறந்தான்.

"ஏம்மா ரம்யா நீ மேல போய் ராஜாவ எழுப்பி கூட்டியா, அங்கேயே ஏதும் சொல்லாதே தூக்க கலக்கத்துல அதிர்ச்சியாவப் போறான்."

"சரி மாமா" என்று சொல்லிவிட்டு சுகுமாரின் மனைவி வேகமாக ராஜாவை கூப்பிட படியேறி மேலே ஓடினாள். சுதர்மன் உள்ளே எட்டி மணி பார்த்தார் மணி ஒன்பது.

"பிரேமா நீ கார் ஓட்டுவல்ல.."

"ஓட்டுவேங்க."

"போய் சாவி எடுத்து வா வண்டிய வெளியே எடு.."

அதற்குள் ராஜா இறங்கி ஓடி வந்தான்.

"அண்ணே அண்ணே என்னண்ணே ஆச்சு அப்பாவுக்கு, அப்பா.. அப்பா.." ராஜா அப்பாவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு கதறினான்.

"டேய்.. டேய்.. புடி அப்படியே அவரை தூக்கு, ஒன்னுல்ல இந்த லூசு பாயசம் கேட்டாருன்னு கொடுத்துச்சாம்."

"நான், ஒன்னும் இல்லீங்க, அப்பா தான் கொஞ்சம் கொடுமான்னு..."

"போடி.. போய் வண்டி எடு, ஏம்மா வீட்ட சாத்திக்கோ, குழந்தைங்க வெளியே போய்டாம."

"நானும் வர்றேன் மாமா.."

"குழந்தைங்களை எங்க, டிக்கியில போட்டுடலாமா?"

"சரி இருக்கேன் மாமா."

"சின்ன பாப்பா அழுதுச்சுன்னா கொஞ்சம் பால் காய்ச்சி கொடு ரம்யா" பிரேமா கத்திக் கொண்டே ஓடிப்போய் வண்டி எடுத்தாள். சுகுமார் பைக் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான். மூத்தவன் சுதர்மனும் அடுத்தவன் ராஜாவும் அப்பாவை தூக்கி வண்டியில் வைத்துவிட்டு ஏறி அமர, ராஜாவின் மனைவி பார்வதி அவசரமாக ஓடிவந்து அப்பாவின் முந்தைய மருத்துவ விவரங்களை பிரேமாவிடம் கொடுக்க, பிரேமா அவசரமாக அதை வாங்கி சுதர்மனிடம் கொடுத்துவிட்டு வண்டியை திருப்பி நிறுத்த...

சுதர்மன் வெளியே எட்டிப் பார்த்து, "ஏம்மா வீட்டுக்கு போன் செய்து உங்க அப்பா இருந்தால் அவர்கிட்ட சொல்லி ஆனந்த் மருத்துவமனைக்கு போன் செய்து ஒரு வார்த்தை சொல்ல சொல்லுமா.

"சொல்லிடறே(ன்) மாமா, அப்பா கண்ணையே திறக்கலையே... மாமா?"

"அதலாம் நம்மப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா."

"ஆகாது மாமா..., ஆனா.."

"சீக்கிரம் வண்டிய எடு பிரேமா."

குறுக்கு வழியே புகுந்து ஆனந்த் மருத்துவமனை வந்தார்கள், அப்பா வாயை "ஆ"வென்று பிளந்துக் கொண்டு கண்மூடி படுத்தவாறு லேசாக கடினப்பட்டு இழுத்து இழுத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். அவரின் அவஸ்தை நிறைந்த முகம் பார்க்க பார்க்க சுதர்மனுக்கும் ராஜாவுக்கும் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது.

சற்று நேரத்திற்குள் மருத்துவமனை வந்து விட, வண்டி நின்று இறங்குவதற்குள், சுகுமார் ஓடி வந்தான். சுதர்மனும், ராஜாவும் அப்பாவை தூக்கப் போக "நீ விடுண்ணே, நீ போய் மருத்துவரை பாரு" என்று சொல்லிவிட்டு அவன் தூக்கிக் கொண்டான். சுதர்மன் உள்ளே போவதற்குள் மருத்துவரே எழுந்து வெளியே வந்தார்.

"டாக்டர் அப்பா திடீர்னு.."

"சுதர்மன் நீங்க தானே?"

"ஆமா டாக்டர்"

"இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா?"

"வந்துருக்குங்க"

"இதற்கு முன் எங்க பார்த்தீங்க.."

"ஆவடில குடும்ப மருத்துவர் ஒருத்தர் இருக்காரு அவர்தான்.."

"ஓ... பரவாயில்லை பரவாயில்லை."

மருத்துவர் அப்பாவின் கண்களை திறந்து பார்த்தார். மார்பில் ஸ்டெதஸ்கோப் வைத்துச் சோதித்துவிட்டு "ராஜகுரு போன் பண்ணாரு, ஒன்னும் ஆவாது பதட்டப்படாதீங்க, சிஸ்டர் வார்ட் நர்ஸ் கூப்பிடுங்க, நேரா மேல கொண்டுப் போகச் சொல்லுங்க."

ஒரு பத்து நிமிடம் கழித்து. அப்பாவைக் கொண்டு போய் மேலே படுக்க வைத்து சுகர் பிரெசர் எல்லாம் பரிசோதித்து விட்டு, ஒரு ஊசி போட, சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா முணுமுணுத்துக் கொண்டே கண்ணைத் திறந்தார்.

பிள்ளைகள் மாறி மாறி அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

"என்னாச்சு டாக்டர் அப்பாவுக்கு, பயப்பட ஒண்ணுமில்லையே?"

"சுகர் பேசென்ட் தானே?"

"ஆமா டாக்டர்"

"மயக்கம் வந்தா மிட்டாய் ஏதேனும் கொடுத்திருக்கலாமே."

"பாயசம் சாப்பிட்டு தான் டாக்டர் மயக்கமே வந்திருக்கு."

"நல்லா விசாரிச்சி பாருங்க முழுசா அவர் அதை குடித்திருக்க மாட்டார், ஏன்னா அவர் லோ பிரெசரால தான் மயங்கி இருக்கார், அதில்லாம சைலன்ட் அட்டாக் வேற வந்திருக்கு."

"சைலன்ட்........?"

"ம்ம், எப்படின்னு சொல்றேன், இருந்தாலும் அடுத்தமுறை இப்படி வந்தா ரொம்ப கவனமா இருக்கணும்."

"கண்டிப்பா டாக்டர்."

"முதல்ல நீங்க ஆளுக்காளு பதட்டப்பட உணர்ச்சிவயப்பட்டதுல அவருக்கு பிரெசர் இன்னும் ஏறிட்டிருக்கு. அதிக பிரெசரால இதய அழுத்தம் வந்திருக்கு. பொதுவா டயாபட்டீஸ் உள்ள நோயாளிக்கு பிரெசர் கூடினா அது விரைவா கிட்னியை பாதிக்கும், இதயத்தையும் பாதிக்கும்."

"இல்லை டாக்டர், அப்பாக்கு முன்பு ஐ சுகர் தான் இருந்தது."

"நீங்க சொல்றது சரி தான் சுதர்மன், ஆனா டயாபட்டீஸ் நோயாளிக்கு சில நேரம் இப்படி சரியான ஆகாரம் இல்லாமல், மாத்திரை மட்டும் போட்டு, கூடவே ஸ்டைன் பண்ணாங்கன்னா, அதி வேகமான எனர்ஜி லாசால சிலநேரம் சுகர் குறையவும் வாய்ப்புண்டு. அதனால தான் டயாபட்டீஸ் உள்ளவங்க எப்போ மயங்கினாலும் ஒரு மிட்டாயோ அல்லது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணியோ கொடுக்கணும்னு நாங்க ரெகெமன்(ட்) பண்றோம்.

அப்படி கொடுப்பதால, ஒருவேளை அவுங்களுக்கு ஐ சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதால சுகர் கொஞ்சம் கூடும்; அதனால் உடம்புக்கு கெடுதல் நேரும்; ஆனா உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனா லோ சுகர் இருந்து காலம் கடத்தினீங்கனா அது அவருடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உண்மையில் அப்பா இன்று பிழைத்தது தெய்வாதீனம் தான்."

"அச்சச்சோ!" பிரேமா வாயில் கைவைத்துக் கொண்டாள்.

"அதே மாதிரி பெரியவங்கன்னாலே கூடுதல் கவனமும் வேணும். இதுபோன்ற சந்தர்ப்பங்கள்ல அவர்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தவோ, தூக்கி இறக்கும் போது அதிகம் அழுத்தவோ வேகமா தூக்கவோ இறக்கவோ கூடாது. அதுலயும் அப்பாவோட, பழைய விவரங்கள்லாம் பார்த்தபிறகு தான் அவருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதும், இதய நோயாளி என்றும் தெரிய வந்தது. இது மிக ஆபத்தான ஒரு கட்டம். டயாபட்டீஸ் ஒண்ணு இருந்தாலே பத்து நோய் இருப்பதற்கு சமம். அதனால், கண்ணு கிட்னி இதயம் மூளை நரம்புகள் தோள் என எல்லாமே "கால்நகத்திலிருந்து தலைமுடிவரை ஒவ்வொன்னா பாதிக்கும், அதில்லாம, டயாபட்டீஸ் உள்ளவங்களுக்கு கொலஸ்ட்ராலும் சேர்ந்திருந்தா அது இன்னும் ஆபத்து."

"என்னாகும் டாக்டர்?"

"மூளையைத் தாக்கி, நரம்புகளை தாக்கி, கை கால்களை செயலிழக்கச் செய்து தற்காலிக அடைப்பு அல்லது நிரந்தர அடைப்பினை உண்டாக்கி உடலின் பெரும்பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது இந்த சர்க்கரை வியாதி. அதில்லாம, எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் சர்க்கரையும் கூடுதல் உள்ளவர்களுக்கு எந்த நேரம் வேணும்னாலும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கு. சிலநேரம் இவர்களுக்கு அட்டாக் வந்தா, அது அவுங்களுக்கே சரியா விளங்குவது கூட இல்லை, சிரிச்சுக்குனே இருப்பாங்க, நல்லாதான் பேசுவாங்க ஆனா திடீர்னு ரத்த குழாய்கள் இரண்டு மூன்று இடங்களில் அல்லது பல இடங்களில் அடைக்கப்பட்டு இதயமே நின்றுவிடும். இதை "சைலன்ட் அட்டாக்"னு சொல்லுவோம்."

"ரொம்ப நல்லதா போச்சி மருத்துவரய்யா அது ரொம்ப நல்ல சாவுல்ல, சிரிச்சிக்குனே போய்டலாம்" அப்பா அசைந்து கண்திறந்து படுக்கை பிடித்துபடி பேசிக் கொண்டே எழுந்தார்.

"அப்பா!!!" என்று பதறிக் கொண்டு மூன்று மகன்களும் பெரிய மருமகளும் ஓடிப் போய் அவருக்கருகில் அமர, மருத்துவர் அவரை எழுந்திருக்க மறுத்துவிட்டு, அவரை படுக்க வைத்து ஸ்டெதஸ்கோப் வைத்து மார்பில் முதுகில் எல்லாம் சோதித்துப் பார்த்தார். பார்த்துவிட்டு அப்பாவை நோக்கி -

"ஏன் துரை ஐயா வயசான காலத்துல இப்படி கஷ்டப்படுத்துறீங்க பிள்ளைகள?"

"அய்யய்யோ எங்களுக்கு அப்படியெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல டாக்டர்."

"நீங்க சும்மா இருங்க சுதர்மன், ம்... நீங்க சொல்லுங்க, வாக்கிங் ஏதும் போறதில்லையா? காலாற ரெண்டு வேலையும் கொஞ்சம் நடக்கறது தானே வீட்டுக்கும் தெருவுக்கும். பொதுவா இதுபோன்ற நோயாளிகளுக்கு நடக்கறதுதான் முதல் மருந்து, அதுக்கப்புறம் தான் மாத்திரையெல்லாம்."

"இனிமே நடந்து என்னங்க செய்ய, சீக்கிரம் போய் சேர்ந்தா பிள்ளைங்களாச்சும் நிம்மதியா இருக்குங்க."

"அப்பா!"

"நீங்க அதலாம் சொல்லாதீங்க துரைசாமி. அவுங்க எவ்வளோ பாசமா இருக்காங்க.. நீங்க கொஞ்சம் கவனமா இருக்க வேணாம்?"

"என்ன டாக்டர், நானும் இன்னும் எவ்வளவு வருசத்துக்குத்தான் இப்படி உப்பில்லாம இனிப்பில்லாம புளிப்பில்லாம சாப்பிட்டு உயிர் வாழறது. இன்னைக்கு கூட பெரியவ கொஞ்சம் பாயசம் ஆசையா கேட்டேனேன்னு கொடுத்தா, அதையும் பசங்க பார்த்தா வருத்தப்படுவாங்களேன்னு ஒரு மினர் குடிச்சிட்டு வெச்சிட்டேன். நாக்கு செத்துப் போச்சி டாக்டர், எது சாப்பிடவும் பிடிக்கலை." அப்பாவை அப்படிச் சொல்ல சுதர்மனுக்கு கண்ணே கலங்கியது. எல்லோருமே வருந்தினார்கள். மருத்துவர் அசரவில்லை -

"மருந்து சாப்பிட மட்டும் இனிக்குதாக்கும், அதலாம் இப்போ சொல்லி பிரயோஜனமில்லை. வயசுல ஒழுங்கா இருக்கணும், உணவுன்னா எப்பவுமே ஒரு அளவிருக்கணும், கட்டுப்பாடு வேணும். கிடைக்குதேன்னு எதை வேண்டுமானாலும் வயித்துல போடக் கூடாது. எண்ணெய் பலகாரங்கள் உண்பதில் இன்னும் அதிகக் கவனம் வேண்டும். தவிர குடி புகைன்னெல்லாம் பழக்கமிருந்தா கடைசியில் இதுதான் கதி.

ஆனா, "எல்லாத்தையும் விட இன்னைக்கு நடந்தது தாங்க அதிசயம்" சொல்லிவிட்டு மருத்துவர் மூன்று மகன்களையும் திரும்பத் திரும்ப பார்த்தார்.

பார்த்துவிட்டு "அதுவரையும் அந்த ஒரு மினர் பாயாசத்தை கொடுத்து எப்படியோ இவர் உயிரைக் காப்பாத்துனீங்க, இல்லைன்னா இவ்வளவு நேரமெல்லாம் கஷ்டம்" மருத்துவர் பேசி நிறுத்த சுதர்மன் திரும்பி பிரேமாவை நன்றியுடன் பார்த்தார்.

"நீங்க ஒண்ணு பண்ணுங்க வாரத்துக்கு ஒரு முறை இந்த சுகர் பார்க்குற மெசின் வாங்கி வைத்து வீட்லையாவது சுகர் செக் பண்ணி பாருங்க. இயன்றளவு டயாபட்டீஸ முதல்ல குறைங்க. இப்பல்லாம் முப்பது வயது துவங்கி விட்டாலே சர்க்கரை ப்ரெஷர் கொலஸ்ட்ரால் என எல்லாத்தையும் ஒருமுறை பரிசோதித்துக்கொள்வது எல்லோருக்குமே நல்லது."

"நல்லது டாக்டர்.. அப்படியே செய்றோம். என்று சொல்ல மருத்துவர் வேறு சில மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.

வாங்கிக் கொண்டு, எல்லோரும் ஏறி வண்டியில் அமர, சுகுமார் ஸ்கூட்டரில் அவர்களுக்கு முன்பாகப் பறந்தான். அப்பா சுதர்மனின் மடியில் சாய்ந்தவாறு படுத்துக்கொள்ள, பிரேமா வண்டி எடுத்தாள் கொஞ்ச தூரம் போனதும் நிறுத்தி -

"என்னங்க வண்டிய நீங்க ஓட்டுங்க, நான் பார்வதிக்கும், ரம்யாக்கும் பேசி விவரம் சொல்லிட்றேன்."

"நீங்க இருங்கண்ணே நான் ஓட்றேன், இல்லைன்னா அண்ணி போன் கொடுங்க நான் அவுங்களுக்கு சொல்லிட்றேன், நீங்க ஓட்டுங்க."

"ஏன்டா உன் போனெங்கே..."

"அவசரத்துல வந்துட்டண்ணே, மேல இருக்கும்."

"சரி இந்தா இதுல பண்ணு."

அவன் அலைபேசியை வாங்கி வீட்டில் பார்வதிக்கும், ரம்யாவிற்கும் விவரம் சொல்லிவிட்டு சுதர்மனிடம் தர, அப்பா அயர்ந்து படுத்திருந்தார், எல்லோரும் தனக்குத் தானே ஏதேதோ யோசித்தவாறு அமைதியாக இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா லேசாக வாயைத் திறந்து பேசத் துவங்கினார்.

"டாக்டர் சொன்னதும் தவறில்லை சுதர்மா..."

"ஏன்பா?"

"நான் ஆரம்பத்துல எல்லாம் ஒழுங்காவே இல்லைதானே. குடிப்பேன், பாக்கு போடுவேன், நேரத்துக்கு சாப்பிட மாட்டேன், புகை பிடிப்பேன், சரியா தூங்க மாட்டேன்."

"நாங்க அப்பட