குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்?

சில வாரங்களாக இரட்டைக் குழந்தைகள், மற்றும் ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் என்று பார்த்தோம். ஒரு குழந்தையோ, இரட்டையரோ, பலரோ, ஒவ்வொரு குழந்தையும் தனி ரகம்தான். ஒட்டிப்பிறந்தவர்களுக்கும் தனித்தனி குணங்கள்; தனித்தனி ஆசைகள். அவர்களை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு நிச்சயம் சவால்தான்.

சிறிது நாட்களுக்கு முன் ஒரு இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. குழந்தை வளர்ப்பு நிகழ்ச்சி அது. ஒரு பெண்மணி தனது மகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனை வயது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் பேசியதிலிருந்து ரொம்பவும் பெரிய பெண் இல்லை என்று புரிந்தது.

 இரண்டுநாட்கள் முன் பள்ளி விடுமுறை. இந்தக் குழந்தை வீட்டில் வழக்கம்போல விளையாடிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். ஆனால் பள்ளியில் தனது ஆசிரியையிடம் ‘நேத்திக்கு ஸ்கூல் லீவு. எனக்கு வீட்டுல இருக்கவே பிடிக்கல. ரொம்ப ‘போர்’ அடிச்சுடுத்து. அழுகை அழுகையாக வந்தது. எப்போ ஸ்கூலுக்கு வரப்போறோம்ன்னு இருந்தது’ என்று சொல்லியிருக்கிறாள். அம்மாவுக்கோ ரொம்பவும் வியப்பு; ஏன் குழந்தை இப்படிச் சொல்லியிருக்கிறாள் என்று. ஆனால் அதைப்பற்றி குழந்தையிடம் ஒன்றுமே கேட்கவில்லையாம். ‘குழந்தையைப் பார்த்து ஏன் பொய் சொன்னாய் என்று கேட்ககூடாது. அதனால் சும்மா இருந்துவிட்டேன்’ என்றார்.

 இவர் இன்னொரு நிகழ்வையும் குறிப்பிடுகிறார். வீட்டிற்கு யாராவது தொலைபேசினால் இந்தக் குழந்தை தொலைபேசியை எடுத்து ‘அம்மா ஊரில் இல்லை. வெளியூருக்கு போயிருக்காங்க’ என்று சொல்லுவாளாம். அம்மா அங்கேயே உட்கார்ந்திருக்கும்போதும் இப்படி சொல்லுவாளாம். அப்போதும் அம்மா எதுவும் சொல்லமாட்டாராம். ‘ஏன் பொய் சொல்லுகிறாய் என்று குழந்தையைக் கேட்ககூடாது இல்லையா?’ என்கிறார். இந்தக் குழந்தை இப்படி ஊரில் இருக்கும்போதே இல்லையென்று சொல்லுவதால் பல சமயங்களில் உறவினரிடம் ஏச்சு கேட்கவேண்டியிருக்குமாம். அப்போதும் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கமாட்டாராம்.