மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகு

மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியே கடாரம்: ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் மலேசிய வழக்கறிஞர்


ராஜேந்திர சோழனுக்கு 'கடாரம்கொண்டான்' என்ற புகழ் கிடைக்க காரணமான இடம்

கடாரம்கொண்டான் என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சோழன் வென்ற கடாரம், மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியாகும் என்கிறார் மலேசியா வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான டத்தோ வீ.நடராஜன் (70).

இடைவிடாமல் தொடர்ந்து ஆய்வு செய்ததன் மூலமாக கிடைத்த தகவல்களையும், அகழாய்வின் ஆதாரங்களையும் படங் களுடன் தொகுத்துள்ளார். அதை, ‘சோழன் வென்ற கடாரம் பூஜாங் பள்ளத் தாக்கு’ என்கிற வரலாற்று நூலாகவும் ஆவணப்படுத்தியுள்ளார்.

சோழர்களின் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தும், பல்லவர் களின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரத்திலிருந்தும் இந்திய வணிகர் கள் கிழக்குமுகமாகப் போகும்போது முதலில் காணக்கூடிய நிலம் கெடா சிகரமாகும் (குனோங் ஜெராய்).

இதனை மாலுமிகள் கலங்கரை விளக்க மாக பயன்படுத்தினர். இதன் அருகேயுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதி மலாக்கா நீரிணைக்குள் நுழைய ஒரு வசதியான இடமாக இருந்தது. இங்கு தங்கம், ஈயம், இரும்பு ஆகிய உலோகங்களுக்கான வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்றது.

பண்டைய கெடாவின் பூஜாங் பள்ளத்தாக் கில்தான் தமிழ்ப் பேரரசன் ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இருந்தது. இந்தியா, இந்தோனேஷியா, சீனா இடையிலான கடல் வணிக வழியில் கடாரம் அமைந்திருந்ததால் இங்கு சிறப்பான முறையில் வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்றது.

இந்தப்பகுதி பண்டைய காலத்தில் கெடா, கிடாரம், காழகம், கடாரம், கடஹா என இந்தியர்களால் அழைக்கப்பட்டது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை இலக்கிய ஆதாரங்கள், புராதன பொருட்கள் வழியாக ஆராய்ந்தபோது இந்த உண்மைகள் தெரிய வந்தன.

மேலும், சீனர்களின் வம்சம் பற்றிய பதிவுகள், சமய பயணிகளின் குறிப்புகள், அரபுக் கடற்பயணிகள், புவியியல் பதிவுகள் ஆகியவற்றில் கிடைத்துள்ள குறிப்புகள் வழியேயும் இவற்றை அறியமுடிகிறது.

தஞ்சை பெரிய கோயிலின் தெற்குச் சுவரிலுள்ள 1030-ம் ஆண்டு மெய்கீர்த்தியில் ராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் குறிக் கப்பட்டுள்ளன. இதனை நீலகண்ட சாஸ்திரி மொழிபெயர்த்திருக்கிறார். அதில், “ராஜேந்திரன் அலைகடல் நடுவில் கப்பல்களை அனுப்பிய பின், கடார மன்னனான சங்கரம-விஜய துங்கவர்மனை சிறைபிடித்து அவனது யானைகளையும் படைகளையும் வென்று, அந்த மன்னனின் செல்வத்தையும் கைப்பற்றினான்” என்றி ருக்கிறது. மேலும், திருவாலங்காடு செப்பேட்டிலும் கடாரப் படையெடுப்பு பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

இப்படியான ஏராளமான வர லாற்றுத் தகவல்களைத் தொகுத்து தந்திருக்கும் வழக்கறிஞர் டத்தோ வீ.நடராஜன் இன்னும் பல வரலாற்றுத் தரவுகளைத் தேடி தமிழகத்துக்கு வந்திருந்தார். அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பண்டைய வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு, ஒருவர் பண்டைய வரலாற்றைப் படித்தால் மட்டும் போதாது. அதனை உணர வும் வேண்டும். என் தந்தை தஞ்சையில் பிறந்தாலும், நான் கெடாவின் சுங்கை பட்டாணியில் பிறந்தவன்.

மலாயா பல்கலைக் கழகத்தில் வரலாற் றைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். இறுதியாண்டில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க, பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி ஆய்வு செய்தேன். அன்றிலிருந்து தொடங் கியது எனது தேடல். பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு வட்டம் என்கிற அமைப்பையும் உருவாக்கினேன்.

வரலாறு என்பது இறந்தகால பாடமல்ல, அது ஒரு உயிர்ப்புள்ள பாடம். கடந்த காலத்தை ஆராய்ந்து நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டு, ஒரு சிறப்பான எதிர் காலத்துக்கு திட்டமிடுவதுதான் வரலாற்றின் வேலையாகும் என உறுதியாக நம்பியதால், எனது வழக்கறிஞர் தொழிலையே ஒன்றரை ஆண்டுகள் விட்டுவிட்டு, முழு வேலையாக இந்த ஆய்வைத் தொடர்ந் தேன். ராஜேந்திர சோழன் வென்றதாக சொல்லப்படும் கடாரம், சுமத்ராவிலும், ஜாவாவிலும் இருப்பதாக பலர் சொல் வார்கள். ஆனால், இது மலேசியாவின் பூஜாங் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிற பகுதியில் உள்ளது.

இதை செப்பேடுகள், சங்க இலக்கிய பாடல்கள், அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய காலப் பொருட்கள், அதில் குறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் வழியே நிரூபித்துள்ளேன்.

அதேபோல, தமிழர்கள் இரும்பை கண்டறியவில்லை, கப்பல் கட்டியதில்லை என்று சிலர் சொல்வதையும் ஏற்க முடியாது. மலேசியாவில் நடைபெற்ற அகழ் வாய்வில் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பை உருக்கும் 3 உலைகள் கிடைத்துள்ளன. தமிழர்கள் முறையாக வரலாற்றை எழுதாத காரணத்தால், பலரும் தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழர்களின் பெருமையையும் ஏற்க மறுக்கிறார்கள். எனது தொடர் ஆய்வுப் பணிகளால் வெகு விரைவில் மலேசியாவில்தான் ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் உள்ளது என்கிற எனது ஆய்வு முடிவை உலக மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.