நேர் காணல்கள்

கவிக்கோ இனிய உதயம் நேர்க்காணல்

கவிக்கோ அப்துல் ரகுமான் உலகம் அறிந்த... உலகை அறிந்த கவிஞர். வாணியம்பாடியின் கவிதைக்குயில் ஆழ்ந்துகற்ற தன் அறிவுச் சிறகுகளால் பறந்து பறந்து... உலக இலக்கிய உன்னதங்களையெல்லாம் தமிழர் வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து கொட்டுகிறது. இவர் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருப்பவர். தன்னைத் தானறிய வைக்கும் தரும்பொழுது... வாசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும் சிந்தனைகள் சிறகடிக்கும். திசை எட்டும் சிதறிக்கிடக்கும் முத்துக்களைக் கோத்து தமிழ் மக்கள் கைகளில் தருபவர். இவர் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். தொடர்ந்து எழுதியும் பேசியும் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பெருங்கவிஞர்... "இனிய உதயம்' இதழின் ஆலோசகர்... தாயன்போடு பிறரை வளரவிட்டுப் பார்த்து மகிழ்பவர். நல்ல படைப்புகளை உள்ளம் திறந்து பாராட்டி உற்சாகப்படுத்தும் கவிஞரின் வாழ்க்கைப் பூவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களின் மகரந்த மணம் இதோ இந்த நேர்காணலில்...

மதுரை வைகை ஆற்று மணல்வெளி உங்கள் மனத்திற்குள் கவிதை வலைவிரித்த காலத்தைக் குறித்துக் கொஞ்சம் கூறுங்கள்...

வைகை நதிக்கரையில் எங்கள் வீடு. தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் வாய்ப்பால் அருந்திய பால் வைகை நதி நீர். அது எனக்குத் தமிழ்க் கவிதையை ஊட்டி வளர்த்தது. எங்கள் வீட்டுக்கு அருகே ஆற்றங்கரையில் ஒரு சேரி. அங்கே குறவன் குறத்தி நடனம் ஆடும் குழு ஒன்று இருந்தது. அவர்கள் நடனம் எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்கள் பாடிய சிந்துப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அந்தப் பாடல்கள்தாம் என் கவிதைக் குழந்தைக்கு சதங்கை கட்டிய அரைஞாண் கயிற்றைக் கட்டின. வைகை ஆற்றங்கரையிலிருக்கும் தியாகராசர் கல்லூரிதான் எனக்கு இரண்டாவது கருப்பையாக இருந்தது. அங்கேதான் நான் கவிஞனாய் வளர்ந்து புகழ்பெற்றேன்.

தங்கள் தந்தையார் சிறந்த கவிஞராக இருந் திருக்கிறார். கவிதைச் சிந்தனை தங்களுக்குள் எந்த வயதில் அரும்பியது? தங்களின் முதல் கவிதை அனுபவம் எதை நோக்கித் தங்களை நகர்த்தியது? முதல் கவிதை எந்த இதழில் வெளிவந்தது?

கவிதை என் ரத்தத்தில் இருந்தது. ஒன்பதாவது வயதில் நான் என் முதல் கவிதையை எழுதினேன். யாப்பிலக்கணம் தெரியாது. பழக்கமான சந்தஞானத்தைத் துணையாகக்கொண்டு அந்தப் பாடல் புனைந்தேன். இயற்கை அழகுதான் அந்த பாடலைப் பாடத் தூண்டியது. இதுதான் அந்தப் பாடல்: எழிலன்னை ஆட்சியடா! -அது எங்கெங்கும் காணுதடா! பொழிலெங்கும் பாடுகிறாள் -புதுப் பூக்களில் புன்னகைத்தாள் மாலை மதியத்திலும் -அந்தி மந்தார வானத்திலும் சோலையின் தென்றலிலும் -சுக சோபனம் கூறுகிறாள் மலைகளின் மோனத்திலே- அந்த வானவில் வண்ணத்திலே அலைகளின் பாடலிலே -அவள் அருள் பொங்கி வழியுதடா! கவிதை உலகின் வெளியே தயக்கத்தோடு நின்றிருந்த எனக்கு அந்தப் பாடல் ஒரு கடைதிறப்பாக இருந்தது. நான் அந்த அதிசய உலகத்திற்குள் தைரியமாக நுழைந்தேன். முதன்முதலாக என் கவிதை வெளிவந்த இதழ் பிரபலமான "ஆனந்த விகடன்'. அப்போது நான் "இண்டர்மீடியேட்' வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். "ஆனந்த விகடன்' அப்போது "மாணவர் திட்டம்' என ஒன்றைத் தொடங்கி மாணவப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பளித்தது. "காதல் கொண்டேன்' என்ற என் கவிதை "ஆனந்த விகட'னில் வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்றது.

வேறு துறைக்குச் செல்லாமல் தமிழைத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? திராவிட இயக்கங்கள் தமிழை முன்னிறுத்தியது காரணமா?

தமிழ் என்னைத் தேர்ந்தெடுத்ததுதான் காரணம். என் இதயத் திரியில் தமிழ் சுடராக எரிந்துகொண்டிருந்தது. திராவிட இயக்கங்கள் எண்ணெய் வார்த்தன.

 
 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices