நிகழ்ச்சி விவரங்கள்:

          கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவும், ‘கவிக்கோ கருவூலம்’ புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கவிக்கோ விருது, கவிக்கோ ஆவணப்படம் வெளியீடு, கவிக்கோவின் இசைப்பாடல்கள் குறுந்தகடு வெளியீடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

          நிறைவு விழா நிகழ்ச்சியில், கவிக்கோ கருவூலம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதை, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன், கவிக்கோ கவிதை அறக்கட்டளைக்கு பொற்கிழி வழங்கி நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கவிக்கோ அப்துல்ரகுமானை நீண்ட காலமாக நான் அறிவேன். வாணியம்பாடியில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்துக்கு நான் அழைக்கப்பட்டு இருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். அன்று முதல் இன்று வரை, இனியும் நான் இருக்கும் வரை, அவரை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட கவிஞர் அப்துல்ரகுமான். அவரைப்பற்றி, நான் உங்களிடம் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதராக, பாசமுள்ள மனிதராக என்னிடம் பழகி வருகிறார். கவியரங்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். தமிழ் கவிஞர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதல் வரிசையில் அப்துல்ரகுமான் இடம்பெற்று இருப்பார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் அவர். நன்றி மறவாத நண்பராக இன்றும் விளங்கி வருகிறார். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

           தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஏற்புரை வழங்கினார். முன்னதாக கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘மகரந்த மழை’ என்ற குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, மற்றொரு இசையமைப்பாளரான ஜிப்ரான் பெற்றுக்கொண்டார்.

          விழாவில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பழ.கருப்பையா எம்.எல்.ஏ., தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 
 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices