உணவே மருந்து ............ மருந்தே உணவு

பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் இயக்கத்திற்கு அடிப்படையானது உணவு. வாயின் மூலம் உட்கொள்ளப்படும் உணவானது குடலில் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. இன்று வரை உலக உயிரினங்கள் உணவுக்காகவே தமது நாளின் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. ஆதி மனிதன் உணவைத்தேடி அலைந்தபோது, புலம் பெயர்ந்திட்ட நிலையில் சமூக உருவாக்கம் ஏற்பட்டது. மனிதர்களுக்கு இடையிலான மோதல் தொடக்ககாலத்தில் உணவுக்காகவே ஏற்பட்டிருக்கவேண்டும். சமூக வளர்ச்சியேற்பட்டு நாகரீகமான சமுதாயம் உருவானபின்னரும், பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்" என்பதுதான் உண்மை.

இன்று உணவு என்பது அலங்காரமான பொருளாக மாறி விட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகைகள், எல்லோருடைய நாக்குகளுக்கும் பல்சுவை உணவுகளுக்கு அடிமையாகிவிட்டன. அறுபதுகளில் உணவு என்பது வயிற்று பசிக்காகத்தான். ருசிக்காகச் சாப்பாடு என்பது பெரும்பாலும் இல்லவே இல்லை. வயலில் வேலை செய்யும் பெரும்பான்மையினர் வீடுகளில் கேப்பை எனப்படும் கேழ்வரகு மாவினால் கிண்டப்பட்ட கூழ்தான் இருக்கும். இல்லாவிடில் சோளக்கூழ், கேப்பை கூழ் கட்டியை பெரிய சொம்பில் நீர் விட்டுக் கரைத்து குடிப்பார்கள். இன்னும் சில வீடுகளில் வெண்கலத்தால் ஆனா  கும்பா  என்ற பாத்திரம் கூழ் குடிக்கப் பயன்படும். இன்னும் சில வீடுகளில் சோளமாவைக் கிண்டி சோளக் கூழினை குடிப்பார்கள். அரிசிச் சோறு சாபிடுவது மிகவும் அபூர்வமே. இன்னும் சில வீடுகளில் ஒரு வாரத்தில் இரவு நேரங்களில் மட்டும் அரிசிச் சோறு பொங்குவார்கள். சூடான சோற்றை ஆற வைப்பதற்காக வீடுகளில் தென்னை மட்டை ஓலையில் பின்னப்பட்ட வட்டமான சுளகு பயன்படுத்தப்படும். சூடாகச் சோறு இருந்தால் நிரம்பச் சோறு சாப்பிட்டு விடுவோம் என்பதற்காகச் சோற்றினை ஆறவைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது

உணவு, பசிக்காக மட்டுமல்ல, நம் என்னத்தைச் செயலாக்க, அந்த எண்ணத்தையும் உத்வேகமாக உருவாக்க, செயலை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும் உடல் திறனை உருவாக்கக் கூடிய வரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது உணவு. அப்படிப்பட்ட உணவு, கலப்படமில்லாத, இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத), இயற்க்கை முறையில் விளைவிக்கப்பட வேண்டும். நம் கலாச்சாரத்திற்கும் நம் மரபனுவிற்க்கும் ஏற்றவாறு அமைந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட உணவே நல்ல சிந்தனையும் செயலையும் கொடுக்கும். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது. உணவில் கவனம் செலுத்துவதே இல்லை. பசித்துப் புசி என்ற முதுமொழி பறந்து போய் விட்டது. நேரம் பார்த்து உண்ணும் நிலை உருவாகிவிட்டது. கண்ட நேரத்தில் உணவு என்றாகிவிட்டது. நாம் நம் குழந்தைகளுக்கு தெருவில் கிடைக்கும் பாஸ்ட்புட் எனப்படும் உணவுகளை வாங்கி கொடுப்பதால் அவர்களின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாகவும், மந்தமாகவும் அமைவதற்கு நாமே காரணமாகிவிடுகிறோம், இதனால் அவர்களால் சரிவர படிக்க முடிவதில்லை. சீக்கிரம் களைப்படைந்து விடுகிறார்கள். இது நம் தவறே அன்றி நம் குழந்தைகளை குற்றம் சொல்வது சரியல்ல நல்ல உணவே நம் மனித வாழ்வின் ஜீவாதாரம் இந்த நிலைமை மாறி நம் முன்னோர்கள் உண்ட ஆரோக்கியமான சத்தான உணவுகளையே நாம் அனைவரும் உண்ணவேண்டும் என்பதையே சிறுதானிய சமையல் நூல் வலியுறுத்துகிறது

முன்பெல்லாம் கேப்பைக் களிவரகரிசிச் சோறு, கம்புதோசை, தேன் கலந்த திணை மாவு போன்ற இச்சிறுதானியங்கள்தான் பெருவாரியான தமிழர்களின் உணவாக இருந்தது. வரகு, சாமை, கம்பு, சோளம், திணை, குதிரை வாலி போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், கொழுப்பு சத்து குறையும், உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறது. உடல் பருமன் ஏற்படாமலும் பதுக்காக்கிறது. மேலும் இத்தானியங்கள் அதிக நார்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் பொன்றவை ஏற்படாது. எளிதில் ஜீரனமடைகிறது. இவற்றில் குறைந்த அளவே குளுக்கோஸ் இருப்பதால் சர்க்கரை நோயிலிருந்து மனிதனைக் காப்பாற்றக் கூடியவை.

உடல் வலுப் பெற நம் முன்னோர்களின் உணவுகளான கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, திணை முதலியவற்றை உண்டதினால் தேக்குமரம் போல் உடல் வலுவாக இருந்தது. இன்று இவையெல்லாம் காணாமல் போய்விட்டது. அரிசியே கதி என்றாகிவிட்டது. அதையும் நாம் பாலிஷ் செய்து தவிடு நீக்கி வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம். இதனால் உடல் வலுவின்றி நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பலவீனமடைகிறது.

நமது பாரம்பரிய உணவு வகைகளை நவீன அறிவியலின் துணைக் கொண்டு நாம் சமைக்க முயல வேண்டும். நம் மூதாதையர் எத்தகைய உணவு சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தினார்கள் என்பதைச் சற்று யோசித்து பார்க்கவேண்டும். எனவே, நாம் கால் போன போக்கில் போகாமல், நன்கு ஆராய்ந்து நம் தாத்தா, பாட்டி செய்து தந்துள்ள உணவு வகைகளை மீண்டும் அதே சுவையுடன் உண்டு, நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வோம், ஆயுள் பெருகி நல் வாழ்வை பெறுவோம்.