பாரதி விழா

'பாரதி விழா'

தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் இவ்வாண்டின் 'பாரதி விழா' , சிங்கைத் தமிழ் நெஞ்சங்களில் சிறப்பிடம் பிடித்தது. இன்று மாலை உமறுப் புலவர் தமிழ் நிலையத்தில் நடந்த இந் நிகழ்வில், பாரதி பேசினான்-பாடினான்-நெஞ்சு நெக்குருகிகே கண்ணீர் வடித்தான். அழுதான்-கூடி இருந்த பெரும் திரளை சொக்குப் பொடி போட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆடாமல், அசையாமல் அமர வைத்தான். அந்த பாரதி வேறு யாருமல்ல,அந்தத் திருநெல்வேலிக்காரர் நெல்லைக் கண்ணன்தான்.

தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தமிழ் மக்கள் தமிழைப் படிக்க, இனத்தைப் பெருக்க, ஒன்றிணைத்து வாழ பல யோசனைகளை, அவருக்கே உரிய பாணியில் சொல்லி அவையோரின் பாராட்டுதல்களைப் பெற்றார்.
இவ்வாண்டு 'பாரதி விருது' பெற்ற பிச்சினிக்காடு இளங்கோ, அருமையானதோர் பேச்சைத் தந்தார். இது, கவிதை,கட்டுரை,பத்திரிகை, வானொலி அனுபவங்களை நிறையப் பெற்ற அவருக்கு மிகப் பொருத்த மான விருது. இன்று இளங்கோவின் பேச்சு தெளிந்த நீரோடை!. பிச்சினிக்காடு , கடுக்கா காட்டிடமிருந்து (ஹரிகிருஷ்ணன்) விருது பெற்றது பேரின்பம் என்றார் கவிஞர் இளங்கோ. குறுகத் திணித்தக் குறள் சிங்கப்பூர் என்ற அவர், அதை உருவாக்கிய திருவள்ளுவர் , ஆசான் லீ குவான் யூ என்றார். பல நாடுகளில் பூங்கா இருக்கும். ஆனால் நம் சிங்கப்பூர் நாடே ஒரு அழகிய பூங்கா என்றார். சிங்கை பாரதிக்கு நம் வாழ்த்துகள்!

இந்து அறக் கட்டளை துணைத் தலைவர் ரா.தினகரன், பாரதியின் கவிதை வாழ்வை சுருக்கமாகச சொன்னாலும், சுவையாகச் சொன்னார். பேசுவதில் பொருள்-பேசியவற்றில் நிறைவு அவருடைய சிறப்பு அம்சங்கள்.

சுருக்கி நெருக்கி நேரத்தை மிச்சப் படுத்தி, மைக்கை நெல்லையாரிடம் ஒப்படைத்தார்கள் முதல் கியரில் கிளம்பிய தமிழ்க் கடல், போகப் போகப் பந்தயக் கார் வேகத்தில் பறந்தது. (சிங்கப்பூரில் தற்போது F1என்கிற உலகக் கார்ப் பந்தயம் நடக்கிறது).

நெல்லை கண்ணன் பேசாத பேச்சில்லை. பாரதியின் பாடல்களை ஆங்காங்கே அவர் அள்ளித் தெளித்த விதம், திருவாசகம்-தேவாரப் பாடல்களுடன் பாரதியின் கவித்துவத்தை கட்டிப் போட்ட விதம், கம்பன், வால்மீகி, வாலி, வைரமுத்து போன்றோரை இழுத்து வந்து இணைத்த விதம், அன்றாடக் குடும்ப அவலங்கள் - சிறப்புகளை அவர் அலசிப்போட்ட விதம், அத்தனையிலும் அவர் நகைச்சுவையை நசுக்கிப் போட்ட விதம்... ஒவ்வொன்றும் அலைச் சிரிப்பை எழுப்பின. இறுதிக் கட்டத்தில், "சிங்கையில் சுகமாக வாழும் நீங்கள் தொடர்ந்து ஒற்றுமையோடு வாழுங்கள்; உங்கள் குழந்தை குட்டிகளை நல்லறிவோடு வளருங்கள் ; அறிவுள்ள குழந்தைகள் தான் நம் எதிர் காலச் சந்ததிகள்" என்று கலங்கிய கண்களுடன் தழு தழு குரலில் சொன்னபோது, , அரங்கம் நிரம்பி அவரது காலடி வரை தரையில் அமர்ந்திருந்த கூட்டம், பல நிமிடங்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவருக்கு நன்றி தெரிவித்தது.

இன்றைய நிகழ்ச்சி நெறியாளர்கள் ராஜு ரமேஷ்-ராம்குமார் சந்தானம் இருவரும், நிகழ்ச்சியை சுருதி குறையாமல் நடத்தினர்.

நன்றி : ஏ.பி.ஆர்.